திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - 10. பல்லவனீச்சுரம்
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 31 - 12.08.2024
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை
நாடு :சோழநாடு காவிரி வடகரை
தலம் : பல்லவனீச்சுரம்
கோவில் அமைப்பு : ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடம் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடக்கும் போது இடதுபுறம் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள முருகப் பெருமானின் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன.
வெளிமண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி, நேரே இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்லவனேஸ்வரர் பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியுடன் எழுந்தருளியுள்ளார். உள்மண்டபத்தில் வலதுபுறம் சிதம்பரத்தில் உள்ளது போன்றே அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.
காவிரிப்பூம்பட்டிணம் பட்டினத்தார் அவதார தலம். பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் "பட்டினத்தார்" என்றழைக்கப்பட்டார்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இரண்டு பதிகங்களும் 1 மற்றும் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தின் சிறப்புகளைப் குறிப்பிட்டு, அத்தகைய தலத்தில் உறையும் இறைவனைப் பற்றி தான் பாடிய பதிகத்தை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும், நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
சம்பந்தர் பதிகம் பாடிய காலத்தில் பல்லவனீச்சரம் எப்படி இருந்தது என்று பார்ப்போமா!
வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும், ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும் மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்திருக்கும், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம் போல் திரண்டிருப்பர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையது, பழியற்ற நன்மக்கள் வாழும் இடம் என்று புகார் என்கிற பல்லவனீச்சரத்தைப் பற்றி பாடுகிறார்.
1. அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடையார் மாட நீடி எங்கும் கங்குல் புறம் தடவப்
படையார் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சரமே
2. எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
3. மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்
கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
4. தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே
5. மை சேர் கண்டர் அண்ட வாணர் வானவரும் துதிப்ப
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பை சேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சரமே
6. குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக்
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்டிரை மொண்டு எறியப்
பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சரமே
7. வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும் புன்னை வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
8. வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும் புன்னை வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
9. அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடலைப்ப
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சரமே
10. உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சரமே
11. பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்து எம்
அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேர செப்பு மாந்தர் தீவினை நோய் இலராய்
ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே
Comments
Post a Comment