திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 30 - 11.08.2024
இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை
திருமுறை : நான்காம் திருமுறை 65 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், பல சோழ நாட்டுத் திருத்தலங்கள் சென்று பெருமானை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். அப்பர் பிரான் சாய்க்காடு சென்றதாக, தனியாக பெரியபுராண குறிப்பு ஏதும் காணப்படவில்லை; என்றாலும், நனிபள்ளி முதலா பல தலங்கள் என்ற குறிப்பில் இந்த தலமும் அடங்கும் என்று பெரியபுராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஒரு நேரிசைப் பதிகமும், ஒரு திருத்தாண்டகப் பதிகமும் நமக்கு கிடைத்துள்ளது. தோடுலா மலர்கள் தூவி என்று தொடங்கும் நேரிசைப் பதிகத்தில் (4.65) சிவபிரானின் பல அருள்செயல்களை விவரித்து, பல அடியார்களுக்கு அவர் அருள் செய்த தன்மை குறிப்பிடப்படுகின்றது. சிறுவன் மார்க்கண்டேயன், தேவர்கள் (பாற்கடலில் விடம் பொங்கிய போது), சிலந்தி, அர்ஜுனன், சந்திரன், சண்டீசர், பகீரதன், கண்ணப்பர், திருமால் மற்றும் அரக்கன் இராவணன் ஆகியோருக்கு அருள் புரிந்த வரலாறு கூறப்படும் பதிகம் இது. இங்கே விளக்கத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள திருத்தாண்டகப் பதிகத்தில் இறைவனது பெருமைகளை நமக்கு உணர்த்தும் அப்பர் பிரான், சாய்க்காடு தலத்தில் இனிது உறையும் செல்வர் என்று ஒவ்வொரு பாடலிலும் இறைவனை அழைக்கின்றார்.
பாடல் எண் : 01
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும்
தில்லை நடமாடும் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையும் தீமையும் ஆனார் போலும்
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 02
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்
வியன் துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்
பண்ணார் களி வண்டு பாடி ஆடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார் முத்து அலைக்கும் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 03
கானிரிய வேழம் உரித்தார் போலும்
காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்
வானிரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்
வடகயிலை மலையது தம் இருக்கை போலும்
ஊனிரியத் தலை கலனா உடையார் போலும்
உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேனிரிய மீன் பாயும் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 04
ஊனுற்ற வெண்தலை சேர் கையர் போலும்
ஊழி பல கண்டிருந்தார் போலும்
மானுற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும்
காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 05
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்
காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 06
மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய
மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூர் உடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரை கழலால் அன்று, குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கு அரியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 07
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்
காரோணத்து என்றும் இருப்பார் போலும்
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்
ஏகம்பம் மேவி இருந்தார் போலும்
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்
பாண்டிக்கொடு முடியும் தம்மூர் போலும்
செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 08
விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்
சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்
சிலையினார் செங்கண் அரவர் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 09
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்
அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடும் தேவர் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
பாடல் எண் : 10
உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கம் செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல் வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண் ஆண் உருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட்கு இனியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
Comments
Post a Comment