திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 28 - 08.08.2024
பல்லவனீச்சரத்து பரமனாரை பணிந்து பதிகங்கள் பாடிய பின்னர், திருஞானசம்பந்தர் காவிரிபூம்பட்டினத்தில் உள்ள மற்றொரு தலமாகிய சாய்க்காடு சென்றார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சாய்க்காடு தலத்து இறைவன் மீது சம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய நேரிசைப் பதிகம் ஒன்றும் (4.65), திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும் (6.82) நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலம் சென்ற சம்பந்தர், தனது சிவந்த கைகளை உச்சி மீது கூப்பி, இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் உடலும் மனமும் உருகும் வண்ணம் மண்புகார் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை
திருமுறை : இரண்டாம் திருமுறை
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.41 - திருச்சாய்க்காடு ( பண் : சீகாமரம் )
பாடல் எண் : 1
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.
பாடல் எண் : 2
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக வுடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே யிடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.
பாடல் எண் : 3
நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
பாடல் எண் : 4
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.
பாடல் எண் : 5
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பான்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினா ரோங்கினா ரெனவுரைக்கு முலகமே.
பாடல் எண் : 6
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாக மெரிகொளுவச் செற்றுகந்தான் றிருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழு மலைமகடோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.
பாடல் எண் : 7
மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின் னிசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.
பாடல் எண் : 8
தொடலரிய தொருகணையாற் புரமூன்று மெரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையாற் றடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா வடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.
பாடல் எண் : 9
வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.
பாடல் எண் : 10
குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் குலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.
பாடல் எண் : 11
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
Comments
Post a Comment