திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 24- 02.08.2024
முதல் தல யாத்திரையாக திருக்கோலக்கா சென்று இறைவனின் அருளினால் பொற்றாளம் பெற்று திரும்பிய திருஞானசம்பந்தர், இரண்டாவது தலயாத்திரையாக, நனிபள்ளி, தலைச்சங்காடு, வலம்புரம், சாய்க்காடு, காவிரிப்பூம்பட்டினம், திருவெண்காடு மற்றும், திருமுல்லைவாயில் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் சம்பந்தர் சீர்காழி திரும்பி, ஆங்கே உறையும் பெருமானைப் புகழ்ந்து சிறந்த பதிகம் பாடினார் என்பதை பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. சின்னாட்கள் சீர்காழியில் தங்கிய பின்னர், மேலும் பல தலங்கள் காண்பதற்கு ஆவல் கொண்டவராய் தனது மூன்றாவது தலையாத்திரையைத் ஞானசம்பந்தர் தொடங்குகின்றார். முதலில் திருமுல்லைவாயில் சென்ற சம்பந்தர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மயேந்திரப் பள்ளி சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.
திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி) திருமுறை பதிகம்
இறைவர் திருப்பெயர் : திருமேனியழகர், சோமசுந்தரர்
இறைவியார் திருப்பெயர் : வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை
திருமுறை : மூன்றாம் திருமுறை 31 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- இத்தலம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது.
இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசி விசுவநாதர், ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது.
மேலும் உள்ளே சென்றால் வலது புறம் நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.
இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இத்தலப் பதிகத்தில் மயேந்திரப்பள்ளியின் இயற்கை வளங்களை சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய மயேந்திரப்பள்ளி இவ்வாறு உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்றும்.
மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய திருமயேந்திரப் பள்ளி என்றும்.
கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்
வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்களுக்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்.
இறைவனை வழிபட மலர்களைக் கையால் ஏந்தி வருவது போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கும் திருமயேந்திரப்பள்ளி என்றும். இத்தலத்தை தனது பதிகப் பாடல்களில் சம்பந்தர் வர்ணிக்கிறார்.
சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலை மேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம்.
பாடல் எண் : 01
திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடி இணை பணிமினே.
பாடல் எண் : 02
கொண்டல் சேர் கோபுரம், கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்து அடி பணிமினே.
பாடல் எண் : 03
கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமும்
மாங் கரும்பும் வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந்தவன் கழலடியிணை பணிமினே.
பாடல் எண் : 04
வங்கமார் சேணுயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி அகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே.
பாடல் எண் : 05
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தலம் மழுவனைக் கண்டு அடி பணிமினே.
பாடல் எண் : 06
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடி பணிந்து உய்ம்மினே.
பாடல் எண் : 07
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவினன் நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே.
பாடல் எண் : 08
சிரம் ஒருபதும் உடைச் செருவலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே.
பாடல் எண் : 09
நாகணைத் துயில்பவன் நலம் மிகு மலரவன்
ஆகணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே.
பாடல் எண் : 10
உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும்
படுபழி உடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணை அடி பணிமினே.
பாடல் எண் : 11
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன் சொல்
நம் பரம் இது என நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
Comments
Post a Comment