திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 18- 27. 07.2024
சிதம்பரத்திலிருந்து, அருகில் இருந்த வேட்களம் சென்ற அப்பர் பிரான், அங்கிருந்து கழிப்பாலை தலத்திற்கும் சென்றார். அங்கு ஐந்து திருப்பதிகங்கள் பாடிய பின்னர் மீண்டும் தில்லைக்குத் திரும்பினார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மண்ணுலகத்தார் நன்றாக வாழும் பொருட்டு பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். நாம் அனைவரும் அப்பர் பிரானைப் பின்பற்றி அவர் அருளிய பாடல்களைப் பாடி உய்வினை அடையவேண்டும் என்ற செய்தியை சேக்கிழார் கூறுகின்றார்.
இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்
இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி
திருமுறை : நான்காம் திருமுறை
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்
பாடல் எண் : 01
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 02
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 03
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆமனெய் ஆட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 04
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 05
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 06
உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 07
ஊனப்பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்
வானப்பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 08
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 09
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு
எதிர் முகம் இன்றி நின்ற எரியுரு அதனை வைத்தார்
பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
பாடல் எண் : 10
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
Comments
Post a Comment