நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே…

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் எப்படி வாழக் கற்றுக் கொண்டோம்? அனைத்தும் நம் பெற்றோர் நமக்கு சொல்லித் தருபவை ஆகும். நாட்கள் செல்ல, செல்ல, சிந்திக்கும் ஆற்றல் கொண்டு இன்னும் புது புது செய்திகளை நாம் பெற்று வருகின்றோம். இங்கே புது, புது என்பவை ஏற்கனவே நம் முன்னோர்கள், தாத்தன், பாட்டன், முப்பாட்டன், அதற்கும் முந்தைய தலைமுறை பின்பற்றி வந்ததாக இருக்கும். இது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. இறைவனை உணரும் வாழ்க்கைக்கும் பொருந்தும். சரி. விசயத்திற்கு வருவோம்.




 நான்கு என்ற சொல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பல விடயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம். திசைகள் நான்கு. வேதங்கள் நான்கு. பிரமனுக்கு முகங்கள் நான்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு. சமயக் குரவர்கள் நால்வர். சந்தான குரவர்கள் நால்வர். தனு, கரண, புவன, போகங்கள் நான்கு. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு. தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு. சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்சியம் என முத்தி நிலைகள் நான்கு. சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் என இறைவனிடம் உபதேசம் கேட்டவர்கள் நால்வர். இப்படி பல விடயங்கள் இந்த நாலில் அடக்கம். நாலு பேர் போன வழியிலே போ என்பார்கள். ஆம்.இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை தெளிவாக நமக்கு எடுத்து சொல்லி வாழ்ந்து காட்டியவர்கள்.

நாலு பேரு சொல்றத கேளுங்க

இது வழக்கமா எப்பவுமே கேட்குற மாதிரி இருக்கும். அந்த காலத்துல இதைத்தான் சொல்லுவாங்க.யாருப்பா அந்த நாலு பேருன்னு நமக்கு நினைக்க தோணும்.பக்கத்து வீட்டுக்காரன்,எதிர்த்த வீட்டுக்காரன் அப்படி,இப்படி னு நாலு பேரா இருக்குமோனு நினைக்கிறோம்.ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரங்களை பார்த்து தான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.எங்க ? நாம நம்ம வாழ்க்கையை வாழுறோம்? அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இங்க நாம சொல்ல வர்ற நாலு பேரு யாருன்னு கேட்டா? இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.

நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

- உமாபதி சிவாச்சாரியார்




 இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.



இப்போது புரியும்னு நெனைக்கின்றோம். அந்த நாலு பேரு வேறு யாரும் அல்ல. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.இவற்றை எல்லாம் நாம் பருகித் திளைக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.நமக்கே தெரியாத போது ? ஹி ..ஹி ..எப்படி சொல்வது என கேட்கிறீர்கள் தானே? அதனால் தான் சொல்கின்றோம் நம் மரபு, சமூகம், பண்பாடு,க லாச்சாரம் நோக்கி கொஞ்சமாவது திரும்பி பார்க்க வேணும். அப்படி பார்த்தல் தான் இது போன்ற செய்திகளை நாம் அறிந்து,உணர முடியும்.



நால்வர் வந்த வழி:
~~~~~~~~~~~~~~
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள்.

சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார்.

நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார்.

சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர்.

மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.






இங்கே கூறியுள்ள நான்கு மார்க்கமே இறையை உணரும் வழி ஆகும். தாச மார்க்கம், சத்புத்ர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்ற இவை நான்கும் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. இவற்றையும் நாம் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.

சரியை - தாச மார்க்கம்

சரியை சைவத்தில்  முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.  இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.

ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.

    சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

    சரியையிற் கிரியை - ஒருமூர்த்தியை வழிபடல்.

    சரியையில் யோகம் - வழிபடும் கடவுளையும் சிவனையும் தியானித்தல்.

    சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.

திருநாவுக்கரசர் இந்த சரியை நெறியைப் பின்பற்றி இறை தரிசனம் பெற்றார்.

கிரியை - சத்புத்ர மார்க்கம்

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் 

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.

    கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.

    கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

    கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

    கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார். 

யோகம் - சக மார்க்கம்

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

    யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.

    யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.

    யோகத்தில் யோகம் - தியானம்.

    யோகத்தில் ஞானம் - சமாதி.

சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார். 

ஞானம் - சன்மார்க்கம் 

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

    ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.

    ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.

    ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.

    ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல்.

மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார். 

நாம் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலமாக மேற்சொன்ன நான்கு மார்க்கங்களிலும் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக அதிகளவில் நம்மை சன்மார்க்கம் தான் ஈர்த்து வருகின்றது. இதனையே நாம் வள்ளலார் வழியிலும், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் ஆசியிலும் பெற்று வருகின்றோம் என்பது கண்கூடு. இந்த நான்கு வழியில் ஏதேனும் ஒன்றைப் பற்றி சென்றாலே இறையை உணர முடியும். மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். உடனே செயலில் இறங்குங்கள். நீங்கள் செல்லும் பாதையில் கற்களும், முட்களும், தடைகளும் வரலாம். அப்போது யாரேனும் உங்களுக்கு வந்து நிச்சயமாக வழிகாட்டுவார்கள் என்பது உறுதி. ஆனால் இன்னும் பாதைக்குள் செல்லாமல் அங்கும், இங்கும் அலைந்து, செய்திகளை தெரிந்து வைத்துக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபடுவது கால விரயமே ஆகும். நீஙகள் எந்த மார்க்கத்தில் இருக்கின்றீர்களோ, அதில் முதலடியோ, பாதையில் சென்று கொண்டிருந்தாலே இன்னும் பயணம் செய்யுங்கள். நால்வர் பெருமக்கள் உங்களை விரல் பிடித்து அழைத்து செல்வார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் சில பாடல்கள் (ஒலி வடிவில்) – வரலாற்றுமுறையில். திருவதிகையில் தொடங்கி திருப்புகலூர் வரை அவர் பாடிய தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டு இறைவனே மெய் மறந்து இருக்கிறான் என்றால் நம்முடைய நிலை என்ன? அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டே அவர் பின் புகுவோம் வாரீர் !! இன்னும் நால்வரின் பாதையில் பயணம் செய்வோம்.


மீண்டும் சிந்திப்போம் 

தென்னாடுடைய சிவனே போற்றி!

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
 
       அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.
 
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
 
சீரார் திருவையாறா போற்றி
 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
 
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
 
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
 
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
 
குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க
 
காவாய் கனகத் திரளே போற்றி
 
கயிலை மலையானே போற்றி போற்றி

-மேலும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்தியர் தேவாரத் திரட்டு அனுதினமும் பாராயணம் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_29.html

 நலம் தரும் பதிகங்கள் - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_27.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)