நலம் தரும் பதிகங்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இதற்கு முந்தைய பதிவில் 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை பற்றி கண்டோம். அதில் முதல் நாள் படிக்க வேண்டிய திருமுறை பாடல்களை தந்தோம். இன்றைய பதிவில் நலம் தரும் பதிகங்கள் பற்றி சிறிது காண இருக்கின்றறோம். பொதுவாக பதிகங்கள் அனைத்தும் நலம் தருபவையே ஆகும். இங்கு நாம் நலம் தரும் பதிகங்கள் என்று சொல்ல காரணம் தற்போது நிலவி வரும் கால சூழலே ஆகும். ஆம். இன்று தொற்றுக்கிருமி உருமாற்றம் பெற்று பரவி வருவதாக செய்தி கேட்டோம். இதன் பொருட்டு நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் தினமும் மாலை ஜூம் செயலி மூலம் பதிகங்கள் படித்து பிரார்த்தனை செய்து வருகின்றோம். பிரார்த்தனை ஒன்றே இறையை சரணடையும் வழி என்பதை நாம் உணர்ந்தோம். இந்த பிரார்த்தனைக்கு உறுதுணையாக இந்த பதிகங்கள் அமைந்து வருகின்றது.


எனவே தான் இந்த நலம் தரும் பதிகங்கள் என்று இன்று காண்கின்றோம். நம் குழுவின் சேவையாக இந்த அச்சு நூல் 100 பிரதிகள் வாங்கி அன்பர்களுக்கு அனுப்பு வைத்தோம். சரி..இந்த நூலில் உள்ள பதிகங்கள் என்ன? என்பதை இன்று காண்போம்.

நலம் தரும் பதிகங்கள்

1. திருநீலகண்டப் பதிகம் - செய்வினையும், தீவினையும் குளிர்காய்ச்சலும் நீங்க 

2. திருநீற்றுப் பதிகம் - தீராத நோய்கள் தீர 

3. திருத்தணி திருப்புகழ் 

இனி ஒவ்வொரு பதிகத்தின் சிறப்பு பற்றி அறிவோமா?

1. திருநீலகண்டப் பதிகம் - செய்வினையும், தீவினையும் குளிர்காய்ச்சலும் நீங்க 


கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிய நோய்களை தீர்க்கக் கூடிய திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம் பாடி நோயிலிருந்து விடுபடுவோம். 

திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்றூர் ( திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலை சேர்ந்த ஐந்து துணை சிவாலயங்கள் உள்ளன.) தலத்தில் திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். 

அப்போது அந்த பகுதியில் ஒரு விஷக் காய்ச்சல் வேகமாக பரவி மக்களை மிகவும் வருத்தியது. அப்போது மக்களை காக்கும் பொருட்டு காழிப்பிள்ளையார் திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்த கொடிய விரட்டியதாக வரலாறு கூறுகிறது.இந்த பதிகம் விஷக் காய்ச்சல் மட்டுமல்ல எல்லா விதமான கொடிய நோய்களை போக்கும் வல்லமை மிக்கது. அதோடு ஊழ்வினையையும், செய்வினை, தீவினையிலிருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்தது.




தற்போது உலகெங்கும் பரவி மக்களை துன்பத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பிலிருந்து மீள, இந்த பதிகத்தை சிவ பெருமான் மீது காதலாகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்கி அவ்வப்போது பாடி வர, நம்மை இந்த கொடிய உயிர்கொல்லியிலிருந்து ஈசன் காத்தருளுவார்.

இன்னும் சற்று விளக்கமாக காண்போம்.

தனது ஐந்தாவது தலயாத்திரையில் தனது வாழ்க்கையில் முதன் முறையாக கொங்கு நாட்டுத் தலங்களுக்கு சென்ற திருஞானசம்பந்தர், முதலில் கொடிமாடச் செங்குன்றூர் தலத்திற்கு சென்று, வெந்த வெண்ணீறு என்று தொடங்கும் பதிகத்தினை (1.107) பாடி மாதொருபாகனைப் போற்றி வணங்கிய பின்னர், திருநணா (தற்போதைய பெயர் பவானி) தலம் சென்று பதிகம் பாடி இறைவனை வணங்குகின்றார். மாதொரு பாகனின் திருக்கோலம் அவரது மனதினை விட்டு நீங்காது இடம் பெற்றிருந்த தன்மையை, திருநணா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.72) ஐந்து பாடல்களில் மாதொருபாகனின் தன்மையை குறிப்பிட்டு இருந்தமையிலிருந்து நாம் உணரலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் அந்த கோலத்தை தனது திருநணா பதிகத்தில் குறிப்பிட்ட போதிலும் அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை போலும். மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று பெருமானின் மாதொருபாகன் திருக்கோலத்தை காண வேண்டும் என்று விரும்பியவராக அவர், பவானியிலிருந்து கொடிமாடச் செங்குன்றூர் செல்கின்றார். இதனிடையில் மழைக்காலம் முடிவுறவே முன்பனிக்காலம் வந்தது. பனியினை வெறுக்கும் வண்டினங்கள் வெளியே வருவதை தவிர்க்க, தாமரை மலர்கள் போதிய வெப்பம் இல்லாமையால் கருக, மரகத மணியினை கோத்தது போன்று மெல்லிய அருகம்புல்லின் முனையில் பனித் துளிகள் படிய பனிக்காலம் இருந்தது என்று சேக்கிழார் விவரிக்கின்றார். அனைத்து வகையான உயிரினங்களும் தத்தம் துணையோடு தங்களது இருப்பிடங்களில் ஒடுங்கி இருக்கும் வண்ணம் பனி கடுமையாக இருந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும், பல மக்கள் மஞ்சளும் குங்குமமும் சேர்த்து அரைத்து, நெருப்பிட்டு அதனில் அகில் பொடிகளைத் தூவி நறுமணம் மிகுந்த புகை எழுப்பி, குளிர் காய்ந்தனர். இத்தகைய சூழ்நிலையில் பல நாட்களாக இந்த தலத்தினில் ஞானசம்பந்தரும் அவருடன் சென்ற அடியார்களும் தங்கியிருந்ததால், அடியார்கள் பலருக்கு மலைநாட்டினில் ஏற்படும் குளிர்சுரம் பாதித்து அவர்களை நடுங்க வைத்தது. அடியார்கள் ஞானசம்பந்தரிடம் சென்று தங்களது துன்பத்தை தெரிவிக்க, ஞானசம்பந்தர் குளிரும் குளிர்சுரமும் மலை நாட்டின் இயல்பு என்று குறிப்பிட்டு எனினும் அந்த இயல்பினால் விளையும் கொடுமைகள் பெருமானின் அடியார்களை சாராமல் இருக்கவேண்டும் என்ற கருத்துடன் இறைவனை வேண்டி, இந்த பதிகம் பாடினார்.


அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எலாம்

முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே

இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா என்று

சென்னிமதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்


அந்த பதிகம் தான் அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் இந்த பதிகம். இறைவனார் உட்கொண்ட நஞ்சினைத் தடுத்து வானவர்க்கும் உலகத்தவர்க்கும் எங்கும் பொங்கிப் பரவிய ஆலகால விடத்தினால் எந்தவிதமான தீங்கும் நேரிடாமல் பாதுகாத்தது நீல நிறமாக மாறிய கழுத்து என்றும், அந்த நீலகண்டம் அடியார்களுக்கு துன்பம் வாராமல் பாதுகாக்கும் என்ற பொருள் பட இந்த பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மேலும் நீலகண்டத்தின் சிறப்பு கருதி, திரு என்ற அடைமொழியை சேர்த்து திருநீலகண்டம் என்று அழைத்து ஆணையிடுவதாக இந்த பதிகம் அமைந்துள்ளது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களும் அடியார்கள் தீவினை தீண்டப்பெறாது திருநீலகண்டம் பாதுகாக்கும் என்று முடிகின்றன.


அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த

வெவ்விடம் முன் தடுத்து எம்மிடர் நீக்கிய வெற்றியினால்

எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே

செய்வினை தீண்டா திருநீலகண்டம் எனச் செப்பினார்


ஞானசம்பந்தர் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று உணர்த்தி பாடிய இந்த திருப்பதிகம், நமக்கு திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று தனது மனைவி ஆணையிட்டதைக் கேட்ட திருநீலகண்டக் குயவனாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பரத்தையின் அழகில் மயங்கிய தனது கணவர், நீலகண்டக் குயவனரின் மீது கோபம் கொண்ட அவரது மனைவி, அவருடன் பிணக்கு கொண்டு அவருடன் பேசுவதையும் தவிர்க்கின்றார். மனைவி தன் பால் கொண்ட கோபத்தை குறைக்க குயவனார் முயற்சி செய்கின்றார். பலவிதமாக இறைஞ்சி பேசிய போதும் மாணவி இணங்காததைக் கண்ட, குயவனார், தனது மனைவியை தொடுவதற்கு முயல, அவரது மனைவியார் திருநீலகண்டத்தின் மீது ஆணை வைத்து நீர் எம்மை தீண்டாதீர் என்று கூறுகின்றார். கணவரும் அதற்கு உடன்படவே ஒருவரை ஒருவர் தொடாமலே பல வருடங்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் அவ்வாறு இருந்ததை அயலவர்கள் எவரும் அறியாத வண்ணம் அவர்கள் வாழ்ந்தனர் என்பதையும், அவர்களின் தன்மையை உலகுக்கு உணர்த்த பெருமான் நடத்திய திருவிளையாடலையும் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது. திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற சொற்கள் எவ்வளவு உயர்வாக அந்நாளில் மதிக்கப் பட்டன என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.


விஷஜுரம், குளிர்க்காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபடவும், தொண்டை நோய் குணமடைந்து குரல் வளம் பெறவும், செய்வினைகளால் வரும் துயரங்கள் நீங்கவும் ஓத வேண்டிய பதிகம் என்று, திருநீலகண்டப் பதிகத்தினை முன்னோர்கள் கூறுவார்கள். சிறந்த பலன்களைத் தரும் பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாக கருதப் படுகின்றது. 


2. திருநீற்றுப் பதிகம் - தீராத நோய்கள் தீர 

திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.

இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது.


பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் கூன் பாண்டியன். சமண மதத்தை சேர்ந்தவன். அவனது மனைவி மங்கையர்க்கரசி சிறந்த சிவபக்தி கொண்டவள். அதே நேரம் கணவனின் மனம் கோணக்கூடாது என்று எண்ணி திருநீற்றை நெற்றியில் அல்லாமல் மார்பில் பூசி வந்தவள்.
 
திருஞான சம்பந்தர் பாண்டிய நாடு அடைந்து ஒரு சத்திரத்தில் தங்கினார். அவரது வருகையை அறிந்த சமணர்கள் பாண்டியனிடம் பலவிதமாக எடுத்துக்கூறி அவர் தங்கியிருந்த சத்திரத்திற்கு தீ மூட்டினர். திருஞானசம்பந்தரோ சென்று பாண்டியனை பிடி என்னும் பொருள்படும்படி ஒரு பாடலை பாடினார். அவ்வாறு  சென்று பிடி என்று பாடியதால் அந்த வெப்பம் பாண்டியனை வெக்கை நோயாக சென்று பீடித்தது.
 
பாண்டியனுடைய மனைவியான மங்கையர்கரசியூம் தவசீலரும் சிறந்த சிவபக்தி கொண்டவருமான அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தப் பெருமானை சென்று சந்தித்தனர். திருஞான சம்பந்தரும் பாண்டியனின் வியாதியை குணப்படுத்த சம்மதித்தார். பின்னர் அவர்கள் பலவாறாக பாண்டியனிடம் பேசினார். முதலில் மறுத்த பாண்டியன் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டான். இதற்கிடையில் சமணர்களும் பலவாறாக பாண்டியனிடம் பேசினர். முடிவில் மன்னனும் இரு மதத்தில் எந்த மதத்தால் தன்னுடைய வியாதி குணமாகிறதோ அந்த மதத்தை இறுதிவரை தழுவி வாழ்வது என்கிற உறுதிமொழி ஏற்றுக்கொண்டான்.
 
குறிப்பிட்ட நாளில் சமணர்கள் பலவித மந்திரங்களை பிரயோகித்தார்கள் என்றபோதிலும் குணம் கூடவில்லை. திருஞானசம்பந்தரோ கையில் வெறும் விபூதி மட்டும் வைத்துக்கொண்டு  ‘‘மந்திரமாவது நீறு வானவர் மேலதும் நீறு’’ என தொடங்கும் திருநீற்றுப்பதிகம் பாடி உடலின் ஒவ்வொரு பாகமாக திருநீறு பூசினார். முடிவில் பாண்டியனின் வெக்கை நோயூம் மறைந்தது. இவ்வாறாக பாண்டியனும் சைவ மதத்தை தழுவினான்.


உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும்.

முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும். பிணியால் பாதிக்கப் பட்டவருக்காக அவரது உறவினர்களும் சொல்லலாம். சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்தப் பதிகத்தை ஓதியபின் அந்த விபூதியை, பாதிக்கப்பட்டவர்க்குப் பூசிவிடுவதாலும் பலன் கிடைக்கும்.


இந்த இரு பதிகங்களும் இன்றைய கால சூழ்நிலையில் தினமும் படிக்க வேண்டிய பதிகம். அடுத்து திருத்தணி திருப்புகழ் வருகின்றது.

3. திருத்தணி திருப்புகழ்  - இருமலு ரோக

இத்திருப்புகழ் பரம குருநாதராகிய அருணகிரிப் பெருமான் உலகில் உள்ள மக்களின் மீதுள்ள அளவற்ற கருணையால் திருத்தணி முருகன் மீது பாடியருளியது. இந்தத் திருப்புகழ் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்பதிகம்.

இத்திருப்புகழை, அன்பர்கள் நாள்தோறும், ஒருமைப் பட்ட உள்ளத்துடன் உருகிய சிந்தையுடன் ஓதினால், நோய்கள் விலகப் பெறுவார்கள். அன்றியும் நோய் தீண்டப் பெறார்கள். நோயின்றி வாழ்ந்தும் வளம் பெறுதற் பொருட்டு அடிகளார் இத்திருப்புகழை இனிது பாடிக் கொடுத்தருளினார்.






ஒவ்வொரு பதிகமாக இனிவரும் பதிவுகளில் தொடர்வோம்.

இந்தத் தருணத்தில், இந்தப் பதிவை படித்து நமது பிரார்த்தனைகளை குமரக் கடவுளிடம் சேர்த்து, நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும், மற்றும் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தருமாறு வேண்டிக் கொள்வோம் !!

தினமும் திருமுறை ஓதுவோம்.



தென்னாடுடைய சிவனே போற்றி!

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
 
       அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.
 
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
 
சீரார் திருவையாறா போற்றி
 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
 
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
 
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
 
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
 
குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க
 
காவாய் கனகத் திரளே போற்றி
 
கயிலை மலையானே போற்றி போற்றி


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)