7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் பதிவாக இன்று காண உள்ளோம். பன்னிரு திருமுறை படிக்க படிக்க இன்பம். இவற்றையெல்லாம் நாம் அறிந்திட புல்லாகி,பூடாகி, புழுவாகி என்ற பிறப்பில் மனித பிறப்பில் இன்று அறிகின்றோம். பெறற்கரிய மானுடப் பிறப்பை நாம் பெற்று இருக்கின்றோம். ஆனால் இதன் அருமை அறியாது இருக்கின்றோம். மானுடப் பிறப்பின் அருமை தெரிந்தால் மட்டுமே நாம் திருமுறை பக்கம் கொஞ்சமாவது நாம் செல்ல இயலும். 

எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.





பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:


  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 



இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.




பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.




பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

பன்னிரு திருமுறை தினமும் ஓதுவதற்கு ஏற்ப, 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை என்று இன்று முதல் தொடர்கின்றோம். இன்று இரண்டாம் நாள் பன்னிரு திருமுறை கீழே தருகின்றோம்.


பன்னிரு திருமுறை - மூன்றாம்  நாள் 

1 ஆம் திருமுறை 

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

2 ஆம் திருமுறை 

கண்காட்டும் நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

3 ஆம் திருமுறை 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

4 ஆம் திருமுறை 

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
  கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
  குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
  வீரட்டா னத்துறை அம்மானே

5 ஆம் திருமுறை 

       முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை         
       இன்னம் நான் உன்  சேவடி ஏத்திலேன்
       செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
       மன்னனே அடியேனை மறவலே

6 ஆம் திருமுறை 

பொறையுடைய பூமி நீர் ஆனாய் போற்றி!
பூதப்படையாள் புனிதா போற்றி! 
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி! 
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி!
வானோர் வணங்கப்படுவாய் போற்றி! 
கறையுடைய கண்டம் உடையாய் போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!

ஆம் திருமுறை 

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

ஆம் திருமுறை 

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
    பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
    தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
    கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
    தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே

ஆம் திருமுறை - திருவிசைப்பா

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே  

திருப்பல்லாண்டு 

எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் 
  எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் 
  அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் 
  எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே 
  என்று பல்லாண்டு கூறுதுமே

10 ஆம் திருமுறை 

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.

11 ஆம் திருமுறை 

 இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு

12 ஆம் திருமுறை 

 கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாஞ் 
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று
பொற்புடன்  நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி! போற்றி!!


 வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tutthamizhthirumurai.blogspot.com/2022/02/7-2.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)